Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி - தீர்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள் :

திருச்சி

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்துக்கு அருகிலுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாளான 30-ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்துக்கு தீர்த்தபேரர் உடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் புனித நீராடினார். அதை நம்பெருமாள் கரையில் நின்றவாறு கண்டருளினார். பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் நம்பெருமான் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x