Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் - ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது : தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி யில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செங்கோட்டை வட்டார புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மணிமேகலை, மண்டல பொறுப்பாளர் சேவியர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக அரசு 12 மாவட்டங்களில் தொடங்குகிறது. அந்த திட்டத்தின் மீது ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு வடிவமாக இது உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை தமிழக அரசு போக்க வேண்டும்.

ஏற்கெனவே பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளியில் இருந்துவிட்டு, மீண்டும் 5 மணி முதல் 7 மணி வரை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும்.

இந்த திட்டத்தை சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் செயல்படுத்த வேண்டும். கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் இத்திட்டம் தொடங்கப் பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த திட்டத்தில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை பயன்ப டுத்தக் கூடாது. 19 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை கற்றல் சூழலுக்கு கொண்டுவரும் முக்கியமான பணி ஆசிரியர்களுக்கு உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தையும் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று சொன்னால் கூடுதல் சுமையாக இருக்கும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான ஊதியம் ஆயிரம் ரூபாயாக இருப்பதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும். தன்னார்வலர்கள் ஆசிரியர் கல்வி, பிஎட் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x