Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு சுமார் 20 மாதங்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங் கப்பட உள்ளன.
தமிழகதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரத்தில் கரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் கரோனா பரவல் குறைந்து காணப்பட்டதால் முதற் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 9-ம் வகுப்பு 11-ம் வகுப்பு மாணவர்களும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவத் தொடங்கியதால் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு, வழக்கம்போல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, இறுதி தேர்வு ஏதுமின்றி அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச் சிப்பெற்றதாக அரசு அறிவித்தது. கரோனா 2-வது அலை தமிழகத்தில் வெகுவாக குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கல்லூரிகளும் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வரு கின்றன.
ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும், பெரிய அளவிலான பாதிப்பு இல்லாததால், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளையும் திறக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.
பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, நவம்பர் 1-ம் தேதி (இன்று) முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
சுமார் 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகம், வகுப் பறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளி வரும் மாணவர்களை விருந்தினர்களை போல பள்ளி வாசல் வரை சென்று ஆசிரியர்கள் வரவேற்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்ததை தொடர்ந்து, மாணவர்களுக்கு பூக்கள், இனிப்பு வழங்கி வரவேற்க ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 470 தொடக்கப் பள்ளிகள், 144 நடுநிலைப்பள்ளிகள், 42 ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகள், 7 ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளிகள், 198 மழலையர் மற்றும் தொடக் கப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி களில் சுமார் 80 ஆயிரம் மாண வர்கள் கல்வி பயில்கின்றனர்.
அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு மாணவர்கள் அச்சமின்றி கல்வி பயில தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்ற ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய வெப்பமானி கருவியும் வைக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வர இருப்பதால் வேலூர் மாவட்டத்தில் 2,262 அரசுப்பள்ளி ஆசிரியர்களும், 1,365 தனியார் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 3,627 ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
மாணவர்களை வாசல் வரை வந்து வரவேற்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், உள்ளாட்சி பிரிதி நிதிகள் என பலர் தயார் நிலையில் உள்ளனர். 20 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் முதலில் மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழி காட்டுதல், புத்தாக்கப்பயிற்சி, முதன்மைப் படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முதல் 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு கதை, பாடல், ஓவியம், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், அனுபவம் பகிர்வு, கலந்துரையாடல், நாட்டியம் உள்ளிட்டவை மனமகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப் படும். அதன் பிறகு முக்கிய பாடக்கருத்துக்களை உள்ளடக்கிய புத்தாக்கப்பயிற்சிகள் செயல் படுத்தப்படும். பின்னர், முதன்மைப்படுத்தப்பட்ட பாடத் திட்டங்களை செயல்படுத்தப்படும்.
இதற்கான வழிகாட்டுதல்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்துப்பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
இதேபோல, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங் களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், தனியார் நர்சரி பள்ளிகளில் மாணவர்கள் வரவேற்க ஆசிரியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்க இருப் பதாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT