Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2-வது நாளாக நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி நேற்று காலை வரையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 75 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இரு மாவட்டங்களிலும் அணைப் பகுதிகள், பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):பாபநாசம்- 42, சேர்வலாறு- 38, மணிமுத்தாறு- 33 , நம்பியாறு- 39, கொடுமுடியாறு- 65, அம்பாசமுத்திரம்- 30 , சேரன்மகாதேவி- 29.80, ராதாபுரம்- 21, நாங்குநேரி- 51, களக்காடு- 42.6, மூலக்கரைப்பட்டி- 67, பாளையங்கோட்டை- 75, திருநெல்வேலி- 57.80. கடனா- 12, ராம நதி- 5, கருப்பா நதி - 64, குண்டாறு- 32, அடவிநயினார்- 48 , ஆய்க்குடி- 36, செங்கோட்டை- 29, தென்காசி- 27.2 , சங்கரன்கோவில்- 61.5, சிவகிரி- 22 .
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலையில் 135.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து பாதுகாப்பு கருதி அணையிலிருந்து பெருமளவு தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1479.75 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 1,404.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர் மட்டம் 80 அடியை எட்டியிருந்தது. அணைக்கு விநாடிக்கு 321 கனஅடி தண்ணீர் வந்தது. 52.25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. நீர்மட்டம் 50.50 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 150 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
தென்காசி
சேர்வலாறு- 135.43 அடி ( 156 அடி), வடக்கு பச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.23 (22.96),
கடனா- 82.90 (85), ராம நதி- 74.75 (84), கருப்பா நதி- 69.56 (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 128 (132.22) .
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 2-வது நாளாக நேற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் வே. விஷ்ணு உத்தரவிட்டார். பலத்த மழையாலும், பாபநாசம் அணையிலிருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல் வேலி குறுக்குத்துறையில் உள்ள முருகன் கோயில் மண்டபத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு நேற்று மாலையில் தண்ணீர் பாய்ந்தோடியது.
மின்இணைப்பு துண்டிப்பு
திருநெல்வேலி மேலப்பாளை யம் துணை மின் நிலையத்திலிருந்து கொக்கிரகுளம் துணை மின் நிலையத்துக்கு வரும் மின் பாதையில் மேலப்பாளையம் ராஜா நகர் தண்ணீர் தொட்டி அருகில் நேற்று அதிகாலை 3. 45 மணியளவில் ஒரு பெரிய மரம் விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சார்லஸ் மற்றும் உதவி மின் பொறியாளர் கார்த்திக் ஆகியோர் மின்வாரிய பணியாளர்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் அங்குவந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மின்தடையை சரி செய்வதற்காக மாற்று ஏற்பாடு மூலம் மின்சாரத்தை சீராக வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT