Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM
ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவரைக் கைது செய்து பணத்தை மீட்டுத் தரக்கோரி, ஈரோடு - பவானி சாலையில் பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு சூளை சி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் பாபு (56). ஏலச்சீட்டு நிறுவனம் மற்றும் சோப்பு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். ஏலச்சீட்டு நிறுவனத்தில், தினசரி வசூல், வார வசூல், மாத வசூல் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் 250-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் பாபு காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஏலச்சீட்டு நிறுவனம் மூடப்பட்டு இருந்தது. நிறுவன ஊழியர்களிடம் பணம் கட்டியவர்கள் விசாரித்தபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பாபு தலைமறைவாகிவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் பவானி சாலையில் உள்ள ஏலச்சீட்டு நிறுவன கிளை அலுவலகத்தில் இருந்து பொருட்களை நேற்று சிலர் எடுக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். பணத்தை திருப்பித் தரவேண்டும் என்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பவானி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
வீரப்பன்சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். ஏலச்சீட்டு நடத்தியதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாகத் தெரிவித்த பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியைக் கைது செய்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இந்த புகார் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT