Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM
நாமக்கல் மாவட்ட ஊரக புத்தாக்கத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, என மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நான்கு வட்டாரங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இவ்வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் ஓரிட சேவை மையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த சேவை மையத்தில் தொழில்சார் வளர்ச்சி அலுவலர் மற்றும் தொழில்சார் நிதி அலுவலர் ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடத்துக்கு விண்ணப்பம் செய்ய கணினி தேர்ச்சியுடன் ஏதாவதொரு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வட்டார அளவில் மைய செயல்பாடுகளை நிர்வகிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தொழில் முனைவோருக்கான திறன் தொகுப்பு பெற்றவராக இருக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் பற்றிய திறன் உள்ளவராக இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள தகுதி பெற்றுள்ள மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் www.tnrtp.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியுள்ள நபர்கள் நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், கே. கே. காம்ப்ளக்ஸ், 460/14 முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம் அருகில், திருச்செங்கோடு சாலை, நாமக்கல் மாவட்டம் 637 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT