Published : 27 Oct 2021 03:10 AM
Last Updated : 27 Oct 2021 03:10 AM

புளியரை ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு - தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் : களேபரக் காட்சிகள் பரவியதால் பதற்றம்

தென்காசி

புளியரை ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளில் ஏற்பட்ட களேபரக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் பதற்றம் நீடிக்கிறது. மீண்டும் தேர்தலை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.

தென்காசி மாவட்டம், புளியரை ஊராட்சிமன்றத் தலைவராக அழகிய திருச்சிற்றம்பலம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. துணைத் தலைவர் பதவிக்கு கடந்த 22-ம் தேதி தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்தது. அதிமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவரும், திமுகவைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவரும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற தங்களது ஆதரவு கவுன்சிலர்களுடன் திரண்டனர்.

அலுவலகத்துக்குள் புகுந்து ரகளை

அப்போது, ஊராட்சிமன்ற அலுவலகத்துக்குள் புகுந்த ஒரு தரப்பினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு வெளியே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் பெண்களின் சேலையைப் பிடித்து இழுத்து தகராறு செய்தனர்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊராட்சி துணைத் தலைவர் பதவி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை கண்டித்து கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊராட்சிமன்ற அலுவலகத்துக்குள் புகுந்து ரகளை செய்தவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது புளியரை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தேர்தல் ரத்து

வேட்புமனு தாக்கலுக்கு முன்பே தகராறு ஏற்பட்டதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும்போது புளியரை ஊராட்சிக்கு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு வெளியே நடந்த களேபர சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுக தரப்பினர் கூறும்போது, “ஊராட்சிமன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த 8 பேர், திமுகவைச் சேர்ந்த 4 பேர் ஊராட்சிமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். துணைத் தலைவர் பதவியை குறுக்கு வழியில் கைப்பற்ற முயன்ற திமுகவினர், வாக்களிக்கச் சென்ற அதிமுகவினரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர்.

பெண் கவுன்சிலரின் சேலையைப் பிடித்து உருவி வன்முறையில் ஈடுபட்டனர். தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனால், தேர்தலை அதிகாரிகள் நிறுத்தி வைத்து விட்டனர். நியாயமான முறையில் தேர்தலை நடத்தி, துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x