Published : 27 Oct 2021 03:10 AM
Last Updated : 27 Oct 2021 03:10 AM

தென்காசி மாவட்டத்தில் பட்டா திருத்தங்களுக்கு சிறப்பு முகாம் :

தமிழக அரசின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பெயர்களில் உள்ள கணினி பட்டா தொடர்பான திருத்தங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

வருவாய் கிராமம் வாரியாக முகாம்கள் நடைபெறும் நாள் குறித்த விவரங்களை tenkasi.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் அன்று துணை ஆட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரால் பொதுமக்களிடமிருந்து கணினி பட்டாவில் புல எண் மற்றும் நிலத்தின் உட்பிரிவு தொடர்பான தவறான பதிவுகள், பரப்பு வித்தியாசம், பட்டாதாரர் பெயர், தந்தை பெயர் மற்றும் பாதுகாவலரின் பெயர் திருத்தம், பட்டாதாரரின் உறவுமுறை தொடர்பான திருத்தங்கள், பட்டாவில் உள்ள கலங்கள் காலியாக உள்ளவை, பட்டாதாரர் பெயர் மற்றும் வீஸ்தீரணம் அருகில் உள்ள பட்டாதாரரின் பெயரில் இருப்பவை தொடர்பான திருத்தங்கள் செய்ய வேண்டி மனுக்கள் பெறப்படும்.

மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு வட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலரால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அன்றைய தினமே பட்டாவில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய உத்தரவு வழங்கப்படும்.

முகாம் நாளன்று பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள் மட்டுமன்றி முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, ஆக்கிரமிப்பு வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கக் கேட்டல், அடிப்படை வசதிகள் கேட்டல் மற்றும் இதர மனுக்களையும் பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x