Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM

அஞ்சலக தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் சேர அழைப்பு : தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

சேலம்

சேலம், ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல் உள்ளிட்ட முக்கிய தபால் நிலையங்களில் இன்று (25-ம் தேதி) தொடங்கி வரும் 29-ம் தேதி வரை தங்கப் பத்திரம் சேமிப்புத் திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் கிழக்குக் கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடும் தங்கப் பத்திரம் சேமிப்புத் திட்டம் இன்று (25-ம் தேதி) தொடங்கி வரும் 29-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. சேலம் மற்றும் ஆத்தூர் தலைமை தபால் அலுவலகங்கள், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலம் தெற்கு, அம்மாப்பேட்டை, அழகாபுரம், பேர்லேண்ட்ஸ், கொண்டலாம்பட்டி, கெங்கவல்லி, பேளூர், வாழப்பாடி, தலைவாசல், மல்லூர், ஏற்காடு உள்ளிட்ட அனைத்து துணை தபால் அலுவலகங்களில் இத்திட்டத்தில் சேர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசு வெளியிடும் தங்கப் பத்திரம், இப்பரிவர்த்தனையில் ஒரு கிராம் ரூ.4,761 என ரிசர்வ் வங்கி விலை நிர்ணயித்துள்ளது. தனி நபர் ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 500 கிராம் வரை தங்கப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு காலம் 8 ஆண்டுகள். தேவைப்படின் 5 ஆண்டுகளில் விலகிக் கொள்ளும் வசதி உள்ளது.

ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியை 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வுத் தொகையை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்குரிய தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான விவரம் அறிய 86673 39788, 90033 11225 என்ற மாவட்ட அஞ்சல் உதவி மைய செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதலீடு செய்ய மிகவும் பாதுகாப்பான திட்டம் என நிதி வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x