Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

நெல்லையப்பர் கோயில் உட்பட முக்கிய திருத்தலங்களில் - ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் :

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்த காந்திமதி அம்மன்.

திருநெல்வேலி

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதியம்மன் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து 10 நாள் நடைபெறும் இத்திருவிழா நாட்களில் சுவாமி, அம்மனுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடை பெறுகிறது. நவம்பர் 1-ம் தேதி கம்பைநதி காமாட்சி அம்மன் கோயில் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 2-ம் தேதி கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் சுவாமி, அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. பின்னர் 3 நாட்கள் ஊஞ்சல் வைபவமும், நிறைவாக சுவாமி, அம்மன் மறுவீடு பட்டணப் பிரவேசமும் நடைபெறுகிறது.

தென்காசி

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருவிழா நேற்று அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 1-ம் தேதி வரை 11 நாட்கள் இத்திருவிழா நடைபெறுகிறது.

கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோயிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெறுகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா கோயில் உள் பிரகாரத்தில் நடைபெறும். 9-ம் நாளில் நடைபெறும் தேரோட்டம் இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கோமதி அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் நடைபெற்றது. தொடர்ந்து கொடி பட்டத்துக்கு சிறப்புப் பூஜைகளுக்கு பின்னர் காலை 7.15 மணியளவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரத்துக்கு பட்டு சார்த்தி, தர்ப்பைப்புல் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து, சோடச தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து கோமதி அம்மன் சிவிகையில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. விழாவில் 11-ம் திருநாளான நவம்பர் 1-ம் தேதி மாலை அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவமும், அன்று இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. நவம்பர் 2-ம் தேதி இரவு பட்டினபிரவேசம் நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு சப்பரங்களில் வீதி உலா வருகிறார். வரும் 1-ம் தேதி அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு சுவாமி காட்சி தருதல் மற்றும் மாலை மாற்றுதல், இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம், சுவாமி, அம்பாள் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போல் வீதி உலா நடைபெறுகிறது. பக்தர்களும் கரோனா பாதுகாப்பு நெறிமுறை களை பின்பற்றி வழக்கம் போல் அனுமதிக்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x