Published : 21 Oct 2021 03:07 AM
Last Updated : 21 Oct 2021 03:07 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் - புதிதாக தேர்வான உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு :

தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவராக பொறுப்பேற்ற 22 வயது பொறியியல் பட்டதாரி ஸாருகலா.(வலது) பாளையங்கோட்டையில் தேர்வான ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர்.படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தென்காசி

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நேற்று பதவியேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 122 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள், 204 ஊராட்சி தலைவர்கள், 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 6 ஊராட்சித் தலைவர்கள், 378 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் 2 உறுப்பினர்கள் பதவியேற்கவில்லை. இதுபோல மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி உறுப்பினர்களில் சிலர் பதவியேற்கவில்லை.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப் பட்டி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

தென்காசி

தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 14 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 144 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்கள், 221 ஊராட்சித் தலைவர்கள், 1,905 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என, மொத்தம் 2,284 உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்..

நாளை (22-ம் தேதி) மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x