Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

குறைந்த மின்னழுத்தத்தால் விவசாயம், தொழிற்சாலைகள் பாதிப்பு : திருப்பூர் ஆட்சியரிடம் மங்கலம் பொதுமக்கள் புகார்

திருப்பூர்

மங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின் தடையால் விவசாயம், தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்கூட்டம் மாவட்ட ஆட்சியர். சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மனுக்கள் அளித்தனர்.

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் அளித்த மனு:

திருப்பூர்-வீரபாண்டி பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட இடுவம்பாளையத்தில், உதவி மின்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதில் விவசாயம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. அலுவலகத்துக்கு உட்பட்ட சின்னாண்டிபாளையம், சின்னியக்கவுண்டம்புதூர், மங்கலம் சாலை, குள்ளே கவுண்டன்புதூர், கோழிப்பண்ணை, குளத்துப்புதூர் மற்றும் மங்கலம் கிராம கிழக்கு பகுதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக, அடிக்கடி ஏற்படும் குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின் தடையால் விவசாயம், தொழிற்சாலைகள் போன்றவை பாதிக்கப்படுகின்றன. அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மீட்டர் பாக்ஸ் மற்றும் வீட்டு உபயோக மின்சாதனக் கருவிகளில் பழுது ஏற்பட்டு உபயோகம் இல்லாமல் போகிறது. தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் பழுதடைவதால் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும்.

அடிப்படை வசதி

மங்கலம் வசந்தம் நகர், அக்ரஹாரபுத்தூர் பொதுமக்கள் அளித்த மனு: கடந்த 12 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகளின்றி 150-க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. வீட்டுமனை அமைத்தபோது, ஊராட்சியிடம் உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தார் சாலை, சாக்கடை கால்வாய், போதிய குடிநீர் வசதி உள்ளிட்டவை இல்லை. அதேபோல வீடுகள் தோறும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. மழைக்காலங்களில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. ஆகவே மேற்கண்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாராபுரம் வீராட்சிமங்கலம் நாகராஜ், மாரியம்மாள் தம்பதி அளித்த மனு: எங்களது மகன் கோபிநாத் (20), கடந்த ஜூலை மாதம் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். இதுவரை என் மகனை கொலை செய்தவர்களை போலீஸார் கைது செய்யவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். மகனை கொலை செய்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x