Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM
புளியங்குடி அருகே கோயிலில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விற்க முடியாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் தவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியில் சொக்கலிங்க சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் சாகுபடி செய்த விவசாயிகள் கோயிலுக்கு குத்தகை நெல் வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கோயிலில் குவிந்து கிடக்கின்றன. மாதக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் அறநிலையத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விவசாயிகளிடம் இருந்து குத்தகை நெல் பெறப்பட்டது. நெல் மூட்டைகள் கோயில் வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, புளியங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் பேசினோம். ஆனால், முதலில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்துவிட்டு, பின்னர் கோயில் நெல்லை கொள்முதல் செய்வதாகக் கூறினர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்த பின்னர் புளியங்குடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.
இதனால், கடையநல்லூர், சிவகிரி நெல் கொள்முதல் நிலையங்களில் பேசி வருகிறோம்.
தனியார் வியாபாரிகள் ஒரு கிலோ நெல் 15 ரூபாய்க்கு கேட்கிறார்கள். அந்த விலைக்கு விற்பனை செய்தால் இழப்பு ஏற்படும். மேலும், குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்தால் எங்களுக்கும் பிரச்சினை உருவாகும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கினால் ஒரு கிலோ நெல்லுக்கு 19 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கும். நெல்லை விற்பனை செய்தால் அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், கோயில் பணிகளுக்கு பயன்படுத்துதல் போன்ற செலவினங்களை மேற்கொள்ள முடியும். எனவே, தொடர்ந்து நெல்லை விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்களில் பேசி வருகிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT