Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

பள்ளி மாணவர்களின் தொடர் முறையீடு எதிரொலி - புளியம்பட்டியில் இருந்து அரசு பேருந்து இயக்கம் : அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை

புளியம்பட்டியில் இருந்து தானிப்பாடிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தை கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி.

திருவண்ணாமலை

பள்ளி மாணவ, மாணவிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று புளியம்பட்டி கிராமத்தில் இருந்து தானிப்பாடிக்கு அரசுப் பேருந்தின் சேவையை போக்குவரத்து கழகம் நேற்று தொடங்கியது.

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த புளியம்பட்டி கிராமத் தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தானிப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், தங்களது கிராமத்தில் இருந்து புதூர் செக்கடி வரை 3 கி.மீ., தொலைவு நடந்து சென்று, பின்னர் அங்கிருந்து அரசு பேருந்தில் பயணித்து கல்வி பயின்று வருகின்றனர்.

3 கி.மீ., தொலைவுக்கு நடந்து செல்வதால் கல்வி பாதிக்கப்படுவதாகவும் மற்றும் இரவு நேரத்தில் வீடு திரும்பும்போது மாணவிகளின் பாதுகாப்புக்கு அச் சுறுத்தல் ஏற்படுவதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இதனால், தானிப்பாடியில் இருந்து புதூர் செக்கடி வரை இயக்கப்படும் அரசுப்பேருந்தை, புளியம் பட்டி வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து ஆட்சியர் பா.முருகேஷிடம் கடந்த 1 மற்றும் 8-ம் தேதி என இரண்டு முறை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும், சமூக ஆர்வலர் உதவியுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதன் எதிரொலியாக, புதூர் செக்கடி வரை இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தின் சேவை, புளியம்பட்டி வரை நீட்டித்து அரசுப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அரசுப் பேருந்து சேவை நேற்று தொடங்கியது. ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி நேரத்தில் காலை மற்றும் மாலை வேளையில் அரசுப் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் ஆரவாரத்துடன் அரசுப் பேருந்தில் பயணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x