Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

சிவகங்கை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு : பயிர்க்கடன் பெறுவோருக்கு மட்டுமே முன்னுரிமை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் பெறுவோருக்கு மட்டுமே உரம் வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் மாவட்டம் முழுவதும் உரத் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறுவோருக்கு மட்டுமே உரம் தர முடியும் என விவசாயிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் தனியார் உரக்கடைகளிலும் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

குறிப்பாக டிஏபி உரம் கிடைக்கவில்லை. இதைப் பயன்படுத்தி சிலர் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

உரங்களுக்காக விவசாயிகள் விவசாயப் பணியை விட்டுவிட்டு தினமும் அலைந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ கூட்டுறவு சங்கங்களில் 831 டன், தனியார் கடைகளில் 940 டன் உட்பட மொத்தம் 2,304 டன் யூரியா இருப்பில் உள்ளது. அதேபோல் டிஏபி உரம் கூட்டுறவு சங்கங்களில் 260 டன், தனியார் கடைகளில் 239 டன் உட்பட மொத்தம் 652 டன் இருப்பில் உள்ளது. மேலும் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

அதிகாரிகள் போதிய அளவில் உரங்கள் இருப்பில் இருப்பதாக தெரிவித்தாலும், சிலர் பதுக்கி வைத்து உரங்களை விற்பதால் தட்டுப்பாடு நிலவுகிறது. அதிகாரிகள் சோதனை நடத்தி தட்டுப்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x