Published : 11 Oct 2021 03:14 AM
Last Updated : 11 Oct 2021 03:14 AM
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற இரண்டாம்கட்ட தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 69.34 சதவீதம், தென்காசி மாவட்டத்தில் 73.35 சதவீதம் வாக்குகள் பதிவானது. இரண்டுகட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
திருநெல்வேலி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு ஆகிய 4 ஒன்றியங்களில் நேற்று முன்தினம் இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்றது.
களக்காடு ஒன்றியத்தில் மொத்தம் 46,495 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 34,006 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 73.14.
நாங்குநேரி ஒன்றியத்தில் மொத்தம் 82,320 வாக்காளர்கள் உள்ள நிலையில் 55,238 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 67.10.
ராதாபுரம் ஒன்றியத்தில் மொத்தம் 98,988 வாக்காளர்கள் உள்ள நிலையில் 68,567 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 69.27.
வள்ளியூர் ஒன்றியத்தில் மொத்தம் 99,266 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 68,990 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 69.50. 4 ஒன்றியங்களிலும் சராசரியாக 69.34 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இரண்டுகட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் நாளை (12-ம் தேதி) எண்ணப்படுகின்றன. அம்பாசமுத்திரம் ஒன்றியத்துக்கு விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சேரன்மகாதேவி ஒன்றியத்துக்கு சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மானூர் ஒன்றியத்துக்கு பழையபேட்டை, ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு முன்னீர்பள்ளம் ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு இடைகால் மெரிட் தொழில்நுட்ப கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நாங்குநேரி ஒன்றியத்துக்கு தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் தொழில்நுட்ப கல்லூரியிலும், களக்காடு ஒன்றியத்துக்கு திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ராதாபுரம் ஒன்றியத்துக்கு தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வள்ளியூர் ஒன்றியத்துக்கு அழகநேரி எஸ்.ஏ.ராஜா கலைக்கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்றது. கடையநல்லூர் ஒன்றியத்தில் மொத்தம் 67,363 வாக்காளர்கள் உள்ள நிலையில் 48,791 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 72.43.குருவிகுளம் ஒன்றியத்தில் மொத்தம் 89,165 வாக்காளர்கள் உள்ள நிலையில் 65,501 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 73.46.
சங்கரன்கோவில் ஒன்றியத்தில் மொத்தம் 87,691 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 65,072 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 74.21.
செங்கோட்டை ஒன்றியத்தில் மொத்தம் 23,314 வாக்காளர்கள் உள்ளனர். 16,683 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 71.56. தென்காசி ஒன்றியத்தில் மொத்தம் 50,805 வாக்காளர்கள் உள்ளனர். 37,459 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 73.73 .
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களிலும் சராசரியாக 73.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
ஆலங்குளம் ஒன்றியத்துக்கு நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலைக்கல்லூரியிலும், கடையம் ஒன்றியத்துக்கு வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு அத்தியூத்து சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும், குருவிகுளம் ஒன்றியத்துக்கு அய்யனேரி உண்ணாமலை கலை கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு வீரசிகாமணி விவேகானந்தா சில்வர் ஜூப்ளி மேல்நிலைப் பள்ளியிலும், சங்கரன்கோவில் ஒன்றியத்துக்கு புளியங்குடி எஸ்விசி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், செங்கோட்டை ஒன்றியத்துக்கு செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேந்நிலைப் பள்ளியிலும், தென்காசி ஒன்றியத்துக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும், வாசுதேவநல்லூர் ஒன்றியத்துக்கு சுப்பிரமணியபுரம் வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT