Published : 09 Oct 2021 03:13 AM
Last Updated : 09 Oct 2021 03:13 AM
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் கடந்த 6-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது. இதற்காக சிவசைலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த 130-வது எண் வாக்குச்சாவடியில் 2, 3-வது வார்டு வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இந்த ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், 2-வது வார்டு வாக்காளர்களுக்கு ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான 3 வாக்குச்சீட்டுகளை மட்டுமே வழங்க வேண்டும். 3-வது வார்டு வாக்காளர்களுக்கு மட்டும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டு உட்பட 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், வாக்குச்சாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள் 2-வது வார்டு வாக்காளர்களுக்கும் ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான வாக்குச் சீட்டுகளை கொடுத்துள்ளனர். வாக்காளர்களும் அதனை பெற்று, வாக்களித்துள்ளனர். இந்த குளறுபடி மதியம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள், 2-வது வார்டைச் சேர்ந்த 45 வாக்காளர்கள் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்களித்துவிட்டது தெரியவந்தது. இதனால், 3-வது வார்டுக்கு மறு தேர்தல் நடத்த தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கோபால சுந்தரராஜ் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், சிவசைலம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் இன்று மறு தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், சிவசைலம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் இன்று மறு தேர்தல் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT