Published : 09 Oct 2021 03:13 AM
Last Updated : 09 Oct 2021 03:13 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் - இன்று 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் : 4,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடை பெறுகிறது. வாக்குச் சாவடிகளுக்கு தேவையான உபகரணங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 2,069 பதவிகளுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அம்பாசமுத் திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளை யங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய ஒன்றியங்களில் 1,113 பதவிகளுக்கு முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 27 பேர், 60 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 307 பேர், 89 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 390 பேர், 801 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,792 பேர் என மொத்தம் 2,516 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

2-ம் கட்ட தேர்தலுக்காக 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 567 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 151 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்பதால் அங்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெப் கேமரா

39 வாக்குச் சாவடிகளை வெப்கேமரா மூலம் அலுவலர்கள் கண்காணிக்கிறார்கள். 36 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 76 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் ஒரே நபர் நான்கு பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதால் வாக்குச் சீட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சீட்டுகள் உட்பட 72 பொருட்கள் அடங்கிய வாக்குச்சீட்டு பெட்டிகள், 12 கரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு மையங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

5 பறக்கும்படை குழுக்கள்

2-ம் கட்ட தேர்தல் பணியில் 4,511 வாக்குப்பதிவு அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு தேர்தல் பணிக்கான 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.

தேர்தலில் 1,60,722 ஆண்கள், 1,65,091 பெண்கள், 13 இதரர் என்று மொத்தம் 3,25,826 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவின்போது முறைகேடுகள் மற்றும் பதற்றத்தை தணிக்க மாவட்டம் முழுவதும் 5 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு நேற்று பிரித்து அனுப்பப்பட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 6 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 60 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 103 ஊராட்சித் தலைவர்கள், 849 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,018 பதவியிடங்கள் உள்ளன. இதில், 5 ஊராட்சித் தலைவர்கள், 194 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 199 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய 819 பதவிகளுக்கு 2,643 பேர் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 574 வாக்குச்சாவடி களில் இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 1,56,219 ஆண்கள், 1,62,100 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 21 பேர் என மொத்தம் 3,18,340 பேர் வாக்காளிக்க உள்ளனர்.

நுண் பார்வையாளர்கள் 46 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடு கின்றனர். 56 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள், எஞ்சிய 518 வாக்குச்சாவடிகளில் கண் காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு கின்றனர். தேர்தல் பணியில் 4,630 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x