Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்த சம்பவம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் மீதான தாக்குதல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது ஆகியவற்றைக் கண்டித்தும் திருச்சியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சு.திருநாவுக்கரசர் எம்.பி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் சுப.சோமு, ரெக்ஸ், ஹேமா, சரவணன், முரளி, பேட்ரிக் ராஜ்குமார், சார்லஸ், ஜெகதீஸ்வரி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சு.திருநாவுக்கரசர் கூறியது: லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தின்போது கார் மோதி விவசாயிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய இணையமைச்சரின் மகனைக் கைது செய்யாமல், இணையமைச்சரை பதவியில் இருந்து நீக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தி அடைத்து வைத்திருந்தது கண்டனத்துக்குரியது.
பெட்ரோல்- டீசல்- சமையல் காஸ் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது.
பிற மாநில முதல்வர்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு, முன்னுதாரணமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT