Published : 05 Oct 2021 03:13 AM
Last Updated : 05 Oct 2021 03:13 AM
திருச்சி/ கரூர்/ பெரம்பலூர்/ திருவாரூர்
திருச்சி- கரூர் புறவழிச் சாலையில் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மண்டை ஓடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கார் மோதி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும் மற்றும் விவசாயிகள் மீது காரை மோதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.தட்சிணாமூர்த்தி, இ.பரமசிவம், மாநிலச் செயலாளர் ஏ.ஜான் மெல்கியோராஜ், மாநில செய்தித் தொடர்பாளர் எஸ்.பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, உ.பி விவசாயிகளின் மரணத்துக்கு நீதி கேட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார்.
கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.ராஜசேகர் தலைமை வகித்தார். இதில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல் உட்பட பல்வேறு அமைப்புகள், சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார்.
இதேபோல, உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மன்னார்குடி காந்தி சிலை முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT