Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 122 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 204 ஊராட்சி தலைவர்கள், 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. இப்பதவிகளுக்கு மொத்தம் 5,527 பேர் போட்டியிடுகிறார்கள்.
முதற்கட்டமாக பாளையங்கோட்டை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 2 வாரமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர பிரச்சாரம் நேற்று மாலையுடன்ஓய்ந்தது.
முதற்கட்ட தேர்தல்வாக்குப்பதிவு 621 வாக்குச் சாவடிகளில் நாளை நடைபெறவுள்ளது. இவற்றில் 5,035 வாக்குப்பதிவுஅலுவலர்கள் பணியாற்றுகிறார்கள். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் 13 வகையான கரோனா தடுப்பு உபகரணங்களும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளன.
தேர்தல் தொடர்பான பணிகளைகண்காணித்திடவும், நடத்தை விதிகள் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுத்திடவும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும், ஒருவர் வீதம் வட்டார பார்வையாளர்களாக நியமிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு இணை இயக்குநர் (வேளாண்மை), திருநெல்வேலி (7010326716), சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், (9445477846), மானுர் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), (9486657500), பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உதவி இயக்குநர் (திறன் பயிற்சி), (9585603363), பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உதவி ஆணையர் (கலால்), (9443936959), நாங்குனேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு துணை ஆட்சியர் (பயிற்சி), (9597953053), களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு துணை இயக்குநர் (தோட்டக்கலை), (9443791079), ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உதவி இயக்குநர் (நில அளவைத்துறை), (9843053352), வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு இணை இயக்குநர் (கல்லூரிகள்) திருநெல்வேலி (8754618584) ஆகிய அலுவலர்கள் வட்டார பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கான அலுவலர்கள் கணினி மூலம் நேற்று தேர்வுசெய்யப்பட்டனர். தேசிய தகவலியல் மையத்தின் ஆன்லைன் மென்பொருள் உதவியுடன் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் தலைமையில் இப்பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை (6-ம் தேதி) நடைபெறுகிறது.முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 754 வாக்குப்பதிவு மையங்களில் 5,618 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் எந்த வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய வேண்டும் என்பதை கணினிமூலம் சுழற்சி முறையில் தேர்வுசெய்யும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட தேர்தல்பார்வையாளர் பொ.சங்கர், மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான பணி ஆணை இன்று (5-ம் தேதி) நடைபெறும் மூன்றாம்கட்ட பயிற்சியின்போது வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT