Published : 04 Oct 2021 03:13 AM
Last Updated : 04 Oct 2021 03:13 AM
தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது.
23-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த 25-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,284 பதவிகளுக்கு 7,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 147 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 903 பேர் வாபஸ் பெற்றனர். 400 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதம் உள்ள 1,878 பதவிகளுக்கு 6,376 பேர் களத்தில் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,069 பதவிகளுக்கு 6,879 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 173 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 79 பேர் வாபஸ் பெற்றனர். 376 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 1,687 பதவிகளுக்கு 5,528 பேர் களத்தில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில், ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களிலும், திருநெல் வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங் கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் முதல்கட்டமாக 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று (4-ம் தேதி) மாலை 5 மணியுடனும், மற்ற ஒன்றியங்களில் 7-ம் தேதி மாலையுடனும் பிரச்சாரம் நிறைவடைகிறது.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 10 ஒன்றியங்களிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரும்பிய திசையெல்லாம் வாக்கு கேட்டு ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டுகள் இருப்பு, வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான 72 வகையான பொருட்கள், வாக்குப் பெட்டிகள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து, வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
தென்காசி, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து முடிக்க அறிவுறுத்தினர்.
அப்போது, தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி, சாய்வு தளம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து, போதிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேர்தல் முடிந்ததும் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றியங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நெல்லையில் கூடுதலாக 5 பறக்கும்படைகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ஏற்கெனவே 5 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கூடுதலாக 5 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 2 பறக்கும்படைகள், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ஒரு பறக்கும்படை வீதம் மொத்தம் 10 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. 3 ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பறக்கும் படைகள் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT