Published : 03 Oct 2021 03:12 AM
Last Updated : 03 Oct 2021 03:12 AM
முன்னாள் எம்எல்ஏ ஆதரவாளர்கள் மிரட்டுவ தாக முன்னாள் பாமக ஒன்றிய தலைவர் விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.
செஞ்சி அருகே கல்லடிகுப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் பாமக சார்பில் 2011-2016ம் ஆண்டில் வல்லம் ஒன்றிய தலைவராக பதவி வகித்துள்ளார். இவர் நேற்று விழுப்புரம் எஸ்பி நாதாவிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது:
சாலைவிரிவாக்க பணியை சப் காண்ட்ராக்ட் எடுத்து செய்துவருகிறேன். கடந்த 30-ம் தேதி வந்தவாசியைச் சேர்ந்த சக்திவேல், பாபு, நரசிம்மன் உட்பட சிலர் நாட்டார் மங்கலத்தில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்தனர். முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் பணம் வாங்கிவர சொன்னதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக நான் கணேஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது வெளியூரில் இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார். அன்று பிற்பகல் சிலர் என் அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். இதுகுறித்து செஞ்சி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எனக்கும் என் மகன்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் பாமக எம்எல்ஏ கணேஷ்குமாரிடம் கேட்டபோது, "ஏழுமலையை 2 திருமண நிகழ்ச்சிகளில் பார்த்துள்ளேன். அவரிடம் பேசியதுகூட இல்லை. கடந்த கால என் கால் ரெக்கார்டரை ஆய்வு செய்தாலே இது தெரியவரும். வந்தவாசியைச் சேர்ந்த சக்திவேலுவுக்கும், இவருக்கும் ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து இருக்கலாம். இதில் என்னை இழுப்பது என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைப்பிப்பதாகும். இது தொடர்பாக விழுப்புரம் எஸ்பியை சந்தித்து பேச உள்ளேன்" என்றார். இதற்கிடையே இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸார் இருதரப்பையும் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பாபு, நரசிம்மன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT