Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM

தீபாவளியை முன்னிட்டு தென்காசி, நெல்லையில் - கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் :

பாளையங்கோட்டையில் உள்ள கதர் கிராம உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற காந்தியடிகளின் 153-வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவப்படத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அ. பெருமாள் திறந்து வைத்தார்.

தென்காசி/திருநெல்வேலி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளரும், கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலருமான பொ.சங்கர் திறந்துவைத்து, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த ஆட்சியர் கோபால சுந்தரராஜ் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் 606 பேரின் குடும்பங்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்துக்கு கதர் விற்பனைக் குறியீடாக ரூ.32.55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்கள் ஆகிய இடங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் இன்று முதல் தீபாவளி வரையில் செயல்படும். அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, கிராம தொழில் கூட்டுறவு அலுவலர் சரவணராஜா, கதர் அங்காடி மேலாளர் ஹென்றி ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் காந்திய டிகளின் 153 வது பிறந்தநாள் விழா பாளையங்கோட்டையில் உள்ள கதர் கிராம உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. காந்தியடிகளின் உருவப்படத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அ. பெருமாள் திறந்து வைத்து, கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.25.96 லட்சம் மதிப்பில் கதர் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதுபோல் கிராம தயாரிப்பு பொருட்கள் ரூ.35.40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள் 442 பேரின் குடும்பங்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக தலா ரூ.5,000 வீதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.

இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு கதர் விற்பனைக் குறியீடாக ரூ.41 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, கண்காணிப்பாளர் மாரிமுத்து, மேலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x