Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

திருச்சி நவல்பட்டில் உள்ள - படைக்கலத் தொழிற்சாலைகளின் பெயர்கள் மாற்றம் :

திருச்சி

திருச்சி நவல்பட்டில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை மற்றும் கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை(எச்ஏபிபி) ஆகியவற்றின் பெயர்கள் இன்று முதல் மாற்றம் செய்யப்படவுள்ளன.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் திருச்சி நவல்பட்டு பகுதியில் துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி), கனரக உலோக ஊடுருவித் தொழிற்சாலை (எச்ஏபிபி) ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதில் எச்ஏபிபி தொழிற்சாலையின் பெயர் கடந்த ஆண்டில் எச்இபிஎப் (ஹை எனர்ஜி புரெஜக்டைல் பேக்டரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த தொழிற்சாலைகளில் ராணுவத்துக்கு தேவையான படைக்கலன்கள், துப்பாக்கிகள், பீரங்கிகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலைகளையும் கார்ப்பரேஷன்களாக மாற்றும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மத்திய அரசு 41 படைக்கலன் தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷன்களாக பிரித்துள்ளது. இந்த நடைமுறை இன்று (அக்.1) தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதில், திருச்சி எச்இபிஎப் தொழிற்சாலை, முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (Munitions India Limited) என்ற நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், இந்த தொழிற்சாலையின் பெயரும் முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் என இன்று முதல் மாற்றப்படவுள்ளது.

இதேபோல, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி) அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட்ஸ் இந்தியா லிமிடெட் (எடபிள்யுஇஐஎல்) நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த தொழிற்சாலையின் பெயரும் எடபிள்யுஇஐஎல் என இன்று முதல் மாற்றப்படவுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஓஎப்டி, எச்ஏபிபி என அழைத்து வந்த பழைய பெயரை தங்களது மனதிலிருந்து மாற்றிவிட முடியாது என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x