Published : 29 Sep 2021 03:21 AM
Last Updated : 29 Sep 2021 03:21 AM
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு பட்டறைகளில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ரவுடிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும், அவற்றை வாங்குவோர் குறித்த பட்டியல் தயாரிக்க வேண்டும் எனவும் அதன் உரிமையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
டிஜிபி உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்வதற்கான சிறப்பு அதிரடி நடவடிக்கை கடந்த 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திருச்சி மாவட்டத்தில் 378 ரவுடிகளைப் பிடித்து விசாரித்தனர். அவர்களில் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்துடன் இருந்த 19 ரவுடிகளை கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ரவுடிகளிடம் ஆயுதங்கள் புழங்குவதைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளுக்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைச் செய்து தரக்கூடிய பட்டறைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், திருச்சி மாவட்டத்தில் ஜீயபுரம் உட்கோட்டத்தில் 14 பட்டறைகளும், லால்குடி உட்கோட்டத்தில் 7 பட்டறைகளும், முசிறி உட்கோட்டத்தில் 6 பட்டறைகளும், மணப்பாறை உட்கோட்டத்தில் 13 பட்டறைகளும் இருப்பதும் தெரியவந்தது.
அவற்றில் ஆய்வு செய்த போலீஸார், இனிவரும் நாட்களில் ரவுடிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும், யாரேனும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது புதுப்பிக்கச் சொன்னாலோ அவர்களின் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் எனவும், அது குறித்த விவரத்தை வாரம் ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதுகுறித்து போலீஸார் முழு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீஸாருக்கு எஸ்.பி பா.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி மணி உத்தரவின்பேரில், மங்களமேடு டிஎஸ்பி சந்தியா தலைமையிலான போலீஸார் அகரம் சீகூர் பகுதியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் செய்யும் பட்டறைகளை நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, பட்டறைகளில் தயாரிக்கும் ஆயுதங்களை வாங்கிச் செல்லும் நபர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்கள் ஆயுதம் வாங்கிச் செல்ல வந்தால், அதுகுறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT