Published : 28 Sep 2021 03:21 AM
Last Updated : 28 Sep 2021 03:21 AM
திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி/ நாகர்கோவில்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திநாடு தழுவிய முழு அடைப்புபோராட்டம் நேற்று நடத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு திமுக மற்றும் கூட்டணிகட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை பல்வேறு தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். தொமுச தலைவர் தர்மர் தலைமை வகித்தார். ஏஐடியுசிமாநில செயலாளர் காசி விஸ்வநாதன், சிஐடியு பொதுச் செயலாளர் மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் பெரும்படையார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற 180 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல வள்ளியூர், களக்காடு, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. 250 பேர் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். துணைத் தலைவர் கனி முன்னிலை வகித்தார்.
தென்காசி
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் டேனியல் அருள்சிங், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுமயில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் இசக்கிதுரை தலைமை வகித்தனர். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், சிபிஐ எம்எல் மாவட்டச் செயலாளர் அயூப்கான், சிஐடியு நிர்வாகிகள் லெனின்குமார், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
வைகுண்டத்தில் மறியலில் ஈடுபட்ட 54 பேர், ஏரலில் 62 பேர், திருச்செந்தூரில் 123 பேர், சாத்தான்குளத்தில் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 203 பெண்கள் உட்பட 829 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்டகாங்கிரஸ் கட்சியினர் புதுகிராமத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிப்காட் வளாகத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடம்பூர் காமராஜர் சிலை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி
கோவில்பட்டி ரயில் நிலையம்முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுகன்வீனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள்சாமி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் க.தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர். 191 பேர்கைது செய்யப்பட்டனர். கயத்தாறில் மறியல் செய்த 37 பேர்,எட்டயபுரத்தில் 74 பேர், ஓட்டப்பிடாரத்தில் 76 பேர், விளாத்திகுளத்தில் 69 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்து, லாரி, ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல இயங்கின. கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருந்தன.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 13 இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் நடந்த போராட்டத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கிவைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமோகன், எல்.பி.எப். மாநில துணைச் செயலாளர் இளங்கோ, ஐ.என்.டி.யு.சி. மாவட்டச் செயலாளர் ஆல்பர்ட், எச்.எம்.எஸ். மாநில துணைச் செயலாளர் குமார், எம்.எல்.எப். மாவட்டச் செயலாளர் ஜெரால்டு, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் செல்லசாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். விஜய் வசந்த் எம்.பி. உட்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
தக்கலையில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், திமுக நகரச் செயலாளர் மணி, ரேவன்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுஜாஜாஸ்மின் உட்பட பலர் கலந்துகொண்டனர். கருங்கல், குலசேகரம், ஆரல்வாய்மொழி, திங்கள்நகர் உட்பட 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 1,400 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT