Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

கொல்லிமலையில் நீர்மின் திட்டப் பணிக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரம் : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாமக்கல்

கொல்லிமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்மின் திட்டப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.338.79 கோடி மதிப்பில் நீர்மின் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கொல்லிமலை தாலுகாவிற்கு உட்பட்ட வளப்பூர் நாடு வழியாகச் செல்லும் அய்யாறு ஆற்றின் கிளை ஓடைகளில் அசக்காடுப்பட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி மற்றும் காடம்பள்ளம் ஆகிய 5 இடங்களில் கலிங்குகள் (சிற்றணை) அமைக்கப்படுகிறது.

மேலும், மின் உற்பத்திக்காக நீரை கொண்டு செல்வதற்கு கொல்லிமலை இருங்குளிப்பட்டியில் இருந்து செல்லிப்பட்டியை நோக்கி 1,522 மீட்டர் நீளம், எதிர்முனையான செல்லிப்பட்டியில் இருந்து இருங்குளிப்பட்டியை நோக்கி 1,383 மீட்டர் நீளம் என மொத்தம் 2,905 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி தற்போது நடைபெற்றது வருகிறது.

இந்தப் பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று ஆய்வு செய்தார். மேலும், கொல்லிமலை நீர்மின் திட்டத்தின் கீழ் தெளியங்கூடு பகுதியில் நீரினை சேகரிப்பதற்காக கட்டப்பட்டு வரும் அணையையும் ஆய்வு செய்தார். அப்போது நீர் மின் திட்டம் மூலம் ஆண்டுக்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், திட்டப்பணி முழு விவரம், பணி நிலவரங்களையும் விளக்கிக் கூறினா். நீர்மின் திட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கோ.ராமச்சந்திரன், செயற்பொறியாளர் சு.பத்மநாபன், திட்ட உதவி செயற்பொறியாளர் ப.செந்தில்குமார், பழங்குடியினர் நலத்துறை திட்ட இயக்குநர் பா.ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x