Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM
மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நகை மோசடி தொடர்பாக வங்கி இயக்குநர் உட்பட 10 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு உட்பட்ட தள்ளுபடி கடனுக்கு தேர்வு செய்யப்பட்ட நகைகள் பரிசோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அடகு வைக்கப்பட்ட 2 வளையல்கள் மாற்றுகுறைந்த நகை என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமார் உத்தரவின்படி துணைப்பதிவாளர் வெங்கடாசலம் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் கூட்டுறவு சங்க எழுத்தாளர்கள் சலோன்மணி, சிவலிங்கம், சுந்தரராஜ் ஆகிய 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் 10 பொட்டலங்களில் கவரிங் நகைகளை வைத்து ரூ.11 லட்சத்து 33 ஆயிரத்து 500 கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே மோசடி தொடர்பாக மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில், கூட்டுறவு சங்க இயக்குநர் மற்றும் 6 உறுப்பினர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 எழுத்தர்கள் என 10 பேர் மீது கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் வெங்கடாசலம் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT