Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு 2024 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி செப்.27-ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும், கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு, மத்தியகால கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. இந்த மத்தியகால கடனை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும். கரோனா நெருக்கடி காரணமாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளை எதிர்காலத்திலும் தக்கவைக்கும் வகையில், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான செயல்பாடுகளால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒருமித்து செயல்பட தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடாக, கடந்த 20-ம் தேதி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை 19 கட்சிகள் இணைந்து நடத்தியுள்ளன. இந்த ஒற்றுமை 2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றார்.
பேட்டியின்போது மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT