Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

இந்தியா, இலங்கை இடையே - கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை : இலங்கை அமைச்சர் தகவல்

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் (இடது ஓரம்), இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானிடம் மனு அளித்த தமிழக மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள்.

சிவகங்கை

இந்தியா, இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், பட்ட மங்கலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான், பின் தங்கிய கிராமப்புற அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதன்பின் இருவரையும் ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: எங்களையும், இலங்கை மீனவர்களையும் பேச வைத்து, இரு நாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பின்னர் செந்தில் தொண்டமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா, இலங்கை மீனவர்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்தி, அமைதியான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள அரசிடம் வலியுறுத்துவோம் என்று கூறினார்.

அமைச்சர் வியாழேந்திரன் கூறியதாவது: இலங்கை, இந்தியா இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

குறிப்பாக காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புதுச்சேரி முதல்வரை சந்தித்துப் பேசினோம். அவரும் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x