Last Updated : 16 Sep, 2021 03:12 AM

 

Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

6,000 ஆண்டு வரலாறு கொண்ட வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணி : அமைச்சரின் அறிவிப்புக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் வரவேற்பு

விருதுநகர்

கீழடியைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டையிலும் அகழாய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சட்டப்பேரவையில் கடந்த வாரம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதற்கு வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியருமான போ.கந்தசாமி கூறுகையில், வெம்பக்கோட்டையில் அதிக அளவிலான நுண்கற்கருவிகள், சங்க கால மட்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள், செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகளை தொல்லியல் அறிஞர் வேதாசலம் மற்றும் பாலச்சந்திரன் கண்டறிந்தனர்.

அர்ச்சுனா நதி, அனுமன் நதி, குண்டாறு, தேவியாறு, மற்றும் வைப்பாறு போன்ற ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள இடங்களில் கடைக்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கற்கருவிகள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கி.மு. 4,000 முதல் கி.மு. 3,000 வரையிலான காலக் கட்டத்திலேயே இங்கு மக்கள் வாழந்துள்ளதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. கடல்களில் கிடைக்கும் கிளிஞ்சல்களால் செய்யப்பட்ட கைவளையல்கள் மற்றும் யானையின் கடைவாய்ப்பல் ஒன்று கல்லாக மாறிய புதைபடிமச் சான்றும் கிடைத்துள்ளது.

1863-ம் ஆண்டில் ராபர்ட் புரூஸ் பூட் என்ற வெளிநாட்டு அறிஞர் விருதுநகர் மாவட்டத்தில் ஆவியூரில் பழைய கற்கால சில்லுக் கருவி ஒன்றை கண்டெடுத்தார்.

சங்க காலத்தை சேர்ந்த கருப்பு- சிவப்பு மண்பாண்ட ஓடுகள் மற்றும் இரும்புப் பொருட்களும் வெம்பக்கோட்டையைச் சுற்றியுள்ள மேடான பகுதிகளின் மேற்பரப்பில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிப்புடன் கூடிய மட்பாண்ட ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்கு வாழ்ந்த தமிழ்ச் சமூக மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. ரோமானிய மட்பாண்ட ஓடுகளும் இங்கு அதிகமாக கிடைப்பதால் இங்குள்ள மக்கள், ரோமானியர்களோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.

1574-ம் ஆண்டில் எழுதப்பட்ட செப்பேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைக்கிற இப்பகுதியில் அகழ்வாய்வு செய்யும்போது மேலும் பல தொல்லியல் பொருட்கள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பண்டைய நாகரிகத்தை அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x