Published : 12 Sep 2021 03:20 AM
Last Updated : 12 Sep 2021 03:20 AM
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி ஆப்ரகாம் லிங்கன், மகளிர் நீதிமன்ற நீதிபதி பத்மா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, தொடங்கி வைத்து பேசினார். மக்கள் நீதிமன்றத்தில் மாவட்டம் முழுவதும் 2,591 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், விபத்து வழக்கில் மனுதாரர் கலைச்செல்வன் என்பவருக்கு நஷ்டஈடாக ரூ.9.26 லட்சம், கார் மோதிய விபத்தில் இழப்பீடு கோரியிருந்த தனசேகரனுக்கு நஷ்டஈடாக ரூ.9.98 லட்சம் வழங்கி உத்தரவிடப்பட்டு அவர்களுக்கான காசோலையை நீதிபதி வழங்கினார்.
356 வழக்குகளுக்குத் தீர்வு
விபத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உட்பட மொத்தம் 1,030 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 356 வழக்குகள் ரூ.13 கோடியே 68 லட்சம் மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் பரமத்தியிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
1,824 வழக்குகளுக்குத் தீர்வு
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த முகாமுக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.கலைமதி தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் 9 அமர்வுகள் அமைக்கப்பட்டு 1792 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 549 வழக்குகளில் ரூ.5 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 221-க்கு தீர்வு காணப்பட்டன.
தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய தலைவருமான குணசேகரன் தொடங்கி வைத்தார்.
மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,964 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,216 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவற்றின் மூலம் ரூ.4 கோடியே 2 லட்சத்து 56 ஆயிரத்து 748-க்கு சமரசம் செய்யப்பட்டது.
இதுதவிர வங்கி வாராக் கடன் வழக்குகளில் 59 வழக்குகளுக்கு ரூ.76 லட்சத்து 17 ஆயிரத்து 88-க்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,275 வழக்குகளுக்கு நேற்று ரூ.4 கோடியே 78 லட்சத்து 73 ஆயிரத்து 836-க்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT