Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM

நாளை மறுதினம் ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்காக - 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர்

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர் களின் வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட உள்ளன என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோ சனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, "செப்டம்பர் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மற்றும் ஏலகிரி மலையில் உள்ள டான்போஸ்கோ கல்லூரி என 2 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இரண்டு தேர்வு மையங்களில் உலோகம் கண்டுபிடிக்கும் கருவி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதை அதிகாரிகள் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். ‘நீட்’ தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 ஆண் காவலர்கள், 2 பெண் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட வேண்டும். தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்களின் வசதிக் காக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேர்வு மையங்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் 5 நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக தேர்வு மைய நுழைவு வாயில்களில் கபசுர குடிநீர், கிருமி நாசினி, முகக்கவசம் வைக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ‘நீட்’ தேர்வை நடத்த வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x