Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

மத்திய அரசின் ரூ.10,683 கோடி ஊக்கத் தொகை அறிவிப்பால் - ஜவுளித் தொழில் துறையில் 7.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : சைமா மற்றும் தொழில் துறையினர் வரவேற்பு

எஸ்.கே.சுந்தரராமன்

கோவை/திருப்பூர்

மத்திய அரசு ரூ.10,683 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதற்கு ஜவுளித் தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் (ஐடிடிஏ) தலைவரும், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) துணைத் தலைவருமான எஸ்.கே.சுந்தரராமன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அமைச்சரவை பிஎல்ஐ எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, செயற்கை பஞ்சினாலான மதிப்பு கூட்டு ஜவுளி ஏற்றுமதிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இதில் செயற்கை பஞ்சில் உற்பத்தி செய்த 42 வகையான ஜவுளி ஆடைகளும், 14 வகையான துணிகளும் மற்றும் 10 வகையான தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களும் அடங்கும்.

மத்திய அரசு ரூ.10,683 கோடிக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் ரூ.19 ஆயிரம் கோடிக்கு புதியமூலதனத்தையும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி கூடுதல் வியாபாரத்தையும், அதன் மூலம் 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் அளிக்க முடியும்.

மேலும் இது, செயற்கை பஞ்சில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியாளர்களின் தொழில் வரலாற்றில் ஒரு மைல்கல். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். சைமா செயலாளர் கே.செல்வராஜு உடனிருந்தார்.

ஜவுளித் தொழில் கூட்டமைப்பு

இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவர் பிரபு தாமோதரன் வெளியிட்ட அறிக்கையில், “ஆடை ஏற்றுமதி துறையில் வளர்ச்சியை அதிகரிக்க ஒரு ஆழமான துணி உற்பத்தி சூழலை இந்தியா கட்டமைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், ஜவுளித் துறைக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக ஜவுளித் தொழில் துறை ஒரு போட்டித் தன்மையை உருவாக்கவும், சந்தையில் நிலைநிறுத்திக் கொள்ளவும் உதவியாக இருக்கும். செயற்கை நூலிழை, செயற்கை பஞ்சு போன்றவற்றால் உருவாக்கப்பட்ட ரகங்கள் மற்றும்தொழில்நுட்ப ரகத்தின் கீழ் வரும்துணி உற்பத்திக்கு இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு பொருந்தும் வகையில் உள்ளது. தொழில் துறைக்கு இது ஒரு முக்கியமானநடவடிக்கை” எனத் தெரிவித்துள் ளார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. இது நாட்டில் செயற்கை நூலிழை துணி, ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரிய அளவிலான நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்பதுடன் தொழில் விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x