Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் 30 டன் சாமந்தி பூக்கள் குவிப்பு : சிறிய அளவிலான சிலைகள் விற்பனை அதிகரிப்பு

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை தேர்வு செய்யும் பெண். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு சேலம் வஉசி பூ மார்க்கெட்டுக்கு 30 டன் சாமந்தி பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் சேலத்தின் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (10-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. மேலும், திருமண முகூர்த்த தினங்களும் வருவதால் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சேலம் வஉசி பூ மார்க்கெட்டுக்கு நேற்று பல வகையான பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, சாமந்தி பூக்கள் 30 டன் அளவுக்கு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பூக்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:

சேலம் வஉசி பூ மார்க்கெட்டுக்கு, விவசாயிகளால் தினமும் 3 முதல் 5 டன் அளவுக்கு சாமந்தி பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் பூசாரிப்பட்டி, தின்னப்பட்டி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டப் பகுதிகளில் இருந்தும் சுமார் 30 டன் அளவுக்கு சாமந்தி பூ கொண்டு வரப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி, திருமண முகூர்த்தங்கள் ஆகியவற்றின் காரணமாக, சாமந்தி பூ விலை கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.140 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது. குண்டு மல்லி கிலோ ரூ.1,200-க்கும், கனகாம்பரம் மற்றும் சன்ன மல்லி கிலோ ரூ.800-க்கும், அரளி ரூ.200 முதல் ரூ.300 வரையிலும், சம்பங்கி ரூ.250-க்கும், ஜாதி மல்லி ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்குப் பயன்படும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் முதல் சற்றே பெரிய விநாயகர் சிலைகள் வரை சேலத்தில் அக்ரஹாரம், குமாரசாமிப்பட்டி, குரங்குச்சாவடி, சூரமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிலையின் அளவைப் பொருத்து ரூ.30 முதல் ரூ.600 வரை பலவகையான விலைகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறிய அளவிலான சிலைகள் அதிகளவில் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x