Published : 09 Sep 2021 03:15 AM
Last Updated : 09 Sep 2021 03:15 AM
சேலம் மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் பெய்யும் மழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. எதிர்வரும் காலங்களில் பெய்யும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பது, சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலைகளில் வழிந்தோடுவது, மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளால் நீர் வெளியேறுவது, குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது.
மேலும், மழையால் ஏற்படக்கூடிய பல்வேறு பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி மைய அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம்.
மாநகராட்சி மைய அலுவலக கட்டுப்பாடு அறை தொலைபேசி எண் 0427- 2212844, சூரமங்கலம் மண்டல அலுவலகம் 0427–2387514, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம்-0427–2310095, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகம் 0427–2263161, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் 0427–2216616 தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் தொடர்பாக தகவல்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT