Published : 07 Sep 2021 03:14 AM
Last Updated : 07 Sep 2021 03:14 AM

ஆட்டையாம்பட்டியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள - அஞ்சல் துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு :

ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே அஞ்சல் துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன.

சேலம்

சேலம் அடுத்த ஆட்டையாம்பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த அஞ்சல் துறைக்கு சொந்தமான சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம் நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டது.

ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் அருகே அஞ்சல்துறை சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் 7,900 சதுரஅடி நிலம் வாங்கப்பட்டது. அந்நிலத்தில் 2,234 சதுர அடி நிலம் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அஞ்சல்துறை சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டது.

எனினும், நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி அஞ்சல் துறை சார்பில் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி ஆகஸ்ட் 27-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆட்டையாம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் தலைமையில் போலீஸார் மற்றும் சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்கள் பார்த்திபன், ராஜசுந்தரம், நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் அஞ்சல் துறைக்கு சொந்தமான நிலத்தில் இருந்த கட்டிடங்கள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x