Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM
சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய ஆட்சியர் கார்மேகம், “ஆசிரியர்கள் ஞானம் பெற்றவர்கள்” என பாராட்டினார்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா மற்றும் ஆசிரியர் தினவிழா நடந்தது. விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். எம்பி பார்த்திபன், எம்எல்ஏ பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கு, தலைமை வகித்து 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசை வழங்கி ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:
ஆசிரியர் ஒவ்வொருக்குள்ளும் அன்பும் திறமையும் உண்டு. அனைத்து ஆசிரியர்களுமே கவுரவிக்கப்பட வேண்டியவர்கள் தான். அனைத்து ஆசிரியர்களையும் கவுரவப்படுத்தும் வகையில் தான் ஆண்டுதோறும் ஒரு சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கப்படுகிறது.
அளவற்ற மானுட நேயம், பாசம்கொண்டவர்கள் நல்ல ஆசிரியராகஇருப்பர். ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒரு நட்சத்திரம் உண்டு. அதை கண்டுபிடிக்கும் கண்கள் நமக்கு வேண்டும். அதனை கண்டுபிடித்தவர் சிறந்த ஆசிரியராக இருப்பார். கடைக்கோடி மாணவரையும் ஆசிரியர் வசீகரிக்க வேண்டும். நான் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்துங்கள் என்று கூறும் மாணவர்களை ஆசிரியர்கள் மேலேற்றிக் கொண்டு வர வேண்டும். திருக்குறள் வாழ்க்கையை கல்வி, செல்வம் என இரண்டாகப் பிரிக்கிறது.
செல்வந்தராக இருப்பது ஒரு வாழ்க்கை, கல்வி கற்று, ஞானம் பெற்றவராக இருப்பது மற்றொரு வாழ்க்கை. ஆசிரியர்கள் ஞானம் பெற்றவர்கள். அவர்கள் தான் இந்த உலகில் புதிது புதிதாக படைப்புகளை உருவாக்கும் சமூகத்தை உருவாக்கி வருபவர்கள். ஞானம் பெற்றவர்களாகிய ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், கரோனா பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களை ஆட்சியர் பாராட்டினார்.
ஈரோடு
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில்,ஆசிரியர்கள் ச.ரத்தினசபாபதி, க.செ.சந்திரசேகரன், அ.மணிகண்டன், அ.பாலகிருஷ்ணன், ச.சேட்டுமதார்சா, நா.கல்யாணி எஸ்.ஏ.நம்பிக்கைமேரி, கெ.சுமதி, ர.ரஞ்சித்குமார், ஆ.தீபலட்சுமி, கோ.ப.ரவிக்குமார், ஜெ.சுமதி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செ.புனிதவதி ஆகிய 13 பேருக்கு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி,டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா.ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (பயிற்சி) மான்விழி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தி.சிவக்குமார் (கோபி), சி.மாதேசன் (ஈரோடு), கா.பழனி (பவானி), அன்பழகன் (சத்தி), த.ராமன் (பெருந்துறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
சேலத்தில் விருது பெற்ற ஆசிரியர்கள்
பெத்தநாயக்கன்பாளையம் மாதேஸ்வரன், இளம்பிள்ளை ரமேஷ், தாண்டவராயபுரம் ரவிக்குமார், செட்டிச்சாவடி சுரேஷ்குமார், கொங்குபட்டி பாஸ்கர், பண்ணப்பட்டி ஆறுமுகம், வாழப்பாடி ஷபிராபானு, வாழப்பாடி காளியம்மன்புதூர் தர், அரிசிபாளையம் சரவணன், காடையாம்பட்டி நடுப்பட்டி பாரதி, கன்னங்குறிச்சி சாந்தி, கெங்கவல்லி ஓடைக்காட்டுப்புதூர் சத்யா, சேலம் ரோஸ்லின் ஆகிய 13 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT