Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM

திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்ல 4 மாதங்களுக்குப்பின் அனுமதி :

களக்காடு மலைப்பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி விழும் தண்ணீர்.

திருநெல்வேலி

களக்காடு புலிகள் சரணாலயத்தில் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் ஆகிய பகுதிகளுக்கு வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கரோனா 2-வது அலையால் தலையணை சுற்றுலா தலம் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மூடப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்திருக்கிறது.

அதன்படி, கடந்த 4 மாதமாக மூடப்பட்டிருந்த தலையணை சுற்றுலா தலம் நேற்று திறக்கப்பட்டு நிபந்தனைகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். திருக்குறுங்குடி நம்பிகோயிலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையையும் வனத்துறை நீக்கியது.

இதுகுறித்து களக்காடு சரணாலய துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் டி.ரமேஷ்வரன் கூறும்போது, “தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின்படி, களக்காடு சரணாலயத்தில் உள்ள தலையணை, நம்பிகோயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்குறுங்குடி நம்பிகோயில் பகுதிக்கு வாரத்தில் செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவர். தலையணை, நம்பிகோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்து வருவதுடன், உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை, மதுபாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவரக் கூடாது. தலையணைக்கு காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்தார்.

முண்டந்துறை சரணாலயம்

இதுபோல திருநெல்வேலி அம்பா சமுத்திரம் அருகே முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

வனப்பகுதியில் இருக்கும் கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.

வனப் பகுதிகளில் இருக்கும் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளில் நீராட தடைவிதிக்கப்படுகிறது என்று, வனத்துறை தெரிவித்துள்ளது.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இணையதள முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. http://kmtr.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x