Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM

பொதுமக்களின் புகார்களின் மீது துரித நடவடிக்கை : நெல்லை மாநகர காவல் ஆணையர் உறுதி

திருநெல்வேலியில் பொதுமக்களின் புகாரின்பேரில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து வருவ தாக வும், கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருப்ப தாகவும், மாநகர காவல் ஆணையர் ந.கி. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர் களிடம், ஆணையர் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து காணாமல்போன ரூ.6.90 லட்சம் மதிப்பிலான, 58 செல்போன்கள் கண்டுபிடிப்பட்டு உரியவர்களிடம் தற்போது ஒப்படைக்கப்படுகின்றன. ஏற்கெனவே, ரூ.4.95 லட்சம் மதிப்பிலான 43 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாநகர காவல்துறை சார்பில் 709 இடங்களில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மாநகர காவல்துறையில் பணியாற்றிவரும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 1,128 பேரில் இதுவரை, 1,022 பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், 707 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும், 315 பேர் முதல் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

சாதிய பிரச்சினைகள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. குற்றநோக்கம் உடைய 278 ரவுடிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் இதுவரை 45 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 71.87 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 130.62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறி, திருட்டு, கொள்ளை மற்றும் இருசக்கர வாகன திருட்டு போன்ற வழக்குகளில், இதுவரை, ரூ. 24,77,141 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாக, மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, கரோனா விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்துவருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாநகரம் முழுக்க குற்றச் செயல்கள், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து பூஜை செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு விதிமுறைகளை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் மற்ற பெருநகரங்களைவிட திருநெல்வேலியில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அந்தந்த பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்களை அழைத்துபேசி இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. 200 இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அடையாளம் காணப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் புகாரின்பேரில் காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் டி.பி. சுரேஷ்குமார் (சட்டம் ஒழுங்கு), கே. சுரேஷ்குமார் (குற்றம் மற்றும் போக்குவரத்து) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x