Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய சேலம் திட்டப் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட 8 சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. கட்டண உயர்வை கைவிட வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 1997-ம் ஆண்டு நெடுஞ்சாலை சட்டத்தின்படி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1-ம் தேதி கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, சேலம் திட்டப் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சேலம்-கோவை சாலையில் உள்ள வைகுந்தம், விஜயமங்கலம், சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, தலைவாசல்- நத்தக்கரை, கள்ளக்குறிச்சி- மாடூர், சேலம்- பெங்களூரு சாலையில் உள்ள ஓமலூர் உள்ளிட்ட 8 சுங்கச்சாவடிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வாகன உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு காரணமாக வர்த்தகத்துறை, தொழில்துறை ஆகியவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100 வரை உயர்ந்துள்ளது. வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையும் உயர்ந்துள்ளது.
இதுபோன்ற செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, வேதனையளிக்கிறது. எனவே, கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க கவுரவத் தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 30 சதவீதம் லாரிகள் வாடகை கிடைக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, வாடகை வருவாயில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சதவீதம் வரை அதிகரித்து வரும் நிலையில், சுங்கச்சாவடிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். எனவே, சுங்கக்கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தும் முடிவை பரிசீலித்து கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT