Published : 28 Aug 2021 03:14 AM
Last Updated : 28 Aug 2021 03:14 AM

சேலத்தில் அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து :

சேலம்

சேலம் சன்னியாசி குண்டு பகுதியிலுள்ள அட்டை கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமானது.

சேலம் மேயர் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் சன்னியாசி குண்டு பகுதியில் அட்டை கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கம்பெனியின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதால் செவ்வாய்ப் பேட்டையில் இருந்து இரண்டு வாகனங்கள், சூரமங்கலம், வாழப்பாடியில் இருந்து தலா ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு, 12 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் அட்டை கம்பெனியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

தீ விபத்து குறித்து கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x