Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM
செப்டம்பர் 1-ம் தேதி முதல் சத்துணவு மையங்கள் திறக்கப்படஉள்ளதால், சத்துணவு ஊழியர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “சத்துணவு மையத்தில் பணியாற் றும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவி யாளர் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பதை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். வளாகங்கள், சமையலறை, குடிநீர் தொட்டி மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், குழந்தைகள் உணவு உட்கொள்ளும் தட்டுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். விரல் நகங்களில் நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்கள் பயன்படுத்தக் கூடாது. ஊழியர்கள் அனைவரும் 2 தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 2 வயதில் இருந்து 6 வயதுக்கு உட்பட்ட முன்பருவக் கல்வி குழந்தைகளுக்கு சூடான சமைத்த உணவு மட்டும் காலை 11.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை வழங்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களுக்கு உணவு வழங்கப்படும். உணவு வழங்கப்படும் நேரத்தில் குழந்தைகளை பெற்றோர் அழைத்து வர வேண்டும். அங்கன்வாடி மையத்திலேயே உணவு உட்கொள்ள வேண்டும். வெளியே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவு பொருட்கள் மற்றும் அதற்கு ஈடான உணவு பாதுகாப்புத் தொகை வழங்கப்படமாட்டாது.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், முகக்கவசம் அணிவதற்கு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை பரிந்துரைக்கவில்லை. எனவே, அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள், முகக்கவசம் அணிந்து வர வேண்டிய அவசியமில்லை. பெற்றோர் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கரோனா வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், அங்கன்வாடி மையத்துக்கு வருவதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.
இதில், கூடுதல் ஆட்சியர் பிரதாப், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT