Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM
பொதுத் துறை நிறுவனங்களை சுரண்டி எடுத்து ஊழல் செய்து மோசமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளிவிட்டது என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் அவர், நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி, ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு, தேசிய சொத்துக்களை பணமாக்கு தல் திட்டத்தின் மூலம் கட்டமைப்புகளை பெருக்கக்கூடிய, மக்கள் நலன்கூடிய ஒரு திட்டத்தை செயல்படுத்த தொடங்கி உள்ளோம்.
நாட்டை விற்கும் முயற்சி மற்றும் காங்கிரஸ் 70 ஆண்டுகள் சேர்த்து வைத்ததை அழிக்கின்றனர் என காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறுகிறார். பொதுத் துறை நிறுவனங்களை சுரண்டி, ஊழல் செய்து, மோசமான நிலைக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி.
விவசாயிகளுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் தமிழகம் கடந்த 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த திமுக அரசு, விவசாய விரோத போக்கை கடைபிடித்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தவில்லை.
தி.மலை மாவட்டத்தில் ஊழல்
தி.மலை மாவட்டத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் இருந்து அதிகளவு லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரின் விலை ரூ.1.50 லட்சம்
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000, காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் மற்றும் கல்வி கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. 100 நாட்களில் அதிகமாக கடன் வாங்கியதுதான் திமுக அரசின் சாதனையாகும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். விழுப்புரத்தில் திமுக கொடி கம்பம் நட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 வயது மாணவர் உயிரின் விலை, ரூ.ஒன்றரை லட்சம் என்ற அராஜக போக்குதான் அவர்களிடம் உள்ளது. ரூ.ஒன்றரை லட்சம் கொடுத்தவர்தான், பல்கலைக் கழகத்தை மூடியுள்ளார்.தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். அது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரம் என்றாலும், கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக பாஜவில், பாலியல் புகார் வந்ததும், குறிப்பிட்ட நபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விசாரணை நடத்தும். தனி நபர் தவறு செய்திருந்தால் பாஜக நடவடிக்கை எடுக்கும். சிவசங்கர் பாபா மட்டுமல்ல குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT