Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஆக.25) தொடங்கி, நடைபெற உள்ளது.
இந்த அரசு கலைக் கல்லூரியில் 19 இளநிலை, 15 முதுநிலை, 12 ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. சுமார் 4,700 மாணவர்கள் பயில்கின்றனர். நடப்புக் கல்வியாண்டில் (2021-22) இளநிலை முதலாமாண்டில் 1,329 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு 9,671 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு, அரசு வழிகாட்டுதலின் படி, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் (www.pacc.in) வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் சேர்க்கை கலந்தாய்வு அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் அவரவருக்கு உரிய கலந்தாய்வு நாளில்சரியாக காலை 9.30 மணிக்கு நேரம் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்புக் கடிதம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் அத்துடன் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் பட்டியல் (பிளஸ்1 மற்றும் பிளஸ்2), மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்கள், மூன்று புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
சிறப்புப்பிரிவில் சேர்க்கை கோரும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் அதற்குரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் இரண்டு நகல்களை கொண்டு வர வேண்டும். உரிய சமூக இடைவெளியில் கலந்தாய்வில் பங்குபெற வேண்டும். இந்த தகவல்களை முதல்வர் (பொறுப்பு) முனைவர் கே. பழனிவேலு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT