Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM
பல மாதங்களுக்குப் பின் ரங்கம் வண்ணத்துப் பூச்சி பூங்காவில் மீண்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளதால் அதற்கேற்ற முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் கடந்த சில மாதங்களாக ரங்கம் மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடைபாதைகள் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே வளர்ந்திருந்த புற்களை அழகாக செதுக்குதல், வண்ணத்துப்பூச்சிகள் குறித்த படங்களை ஒளிபரப்பக்கூடிய திரையரங்கை சீரமைத்தல், பார்வையாளர்களுக்கு தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதி கிடைப்பதற்கான கட்டமைப்பை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களில் ஏற்பட்டிருந்த பழுதுகளை நீக்குதல், படகு குழாம் மற்றும் செயற்கை நீருற்றுகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா வன சரகர் பழனிவேல் தலைமையிலான வனத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணிகளை மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண், உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் என்.சதீஷ் இன்று (ஆக.25) அங்கு சென்று பணிகளை பார்வையிட உள்ளார்.
இதுகுறித்து வன அதிகாரிகள் கூறும்போது, ‘‘வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனாவால் குழந்தைகள் உள்ளிட்டோர் பொழுதுபோக்குக்கு இடமின்றி தவித்த நிலையில் பல மாதங்களுக்குப் பின் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளதால், அதிகளவிலானோர் வருகை தர வாய்ப்புள்ளது.
எனவே அதற்கேற்ப விரிவான உட்கட்டமைப்பு மற்றும் கரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துறை அதிகாரிகளின் உத்தரவு வந்த உடன் பூங்காவில் பார்வையாளர்களை அனுமதிக்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT