Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM
புதிய ஹால்மார்க் முத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோட்டில் நகைக் கடைகளை இரண்டரை மணி நேரம் மூடி நகை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சேலத்தில் நகைக்கடைகள் அதிகம் உள்ள கடை வீதி, புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஓமலூர் சாலை உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை நகைக் கடைகளை திறக்காமல் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடை முன்பு திரண்டனர். பின்னர் புதிய ஹால்மார்க் நடைமுறையை கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
சுமார் இரண்டரை மணி நேர தாமதத்துக்குப் பின்னர் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. இதுதொடர்பாக தமிழ்நாடு தங்கம், வெள்ளி நகை வணிகர்கள் சங்கத் தலைவர் ராம் கூறியதாவது:
சேலத்தில் 400-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளன. இக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தங்க நகைகளின் தரத்தை உறுதிபடுத்தும் ஹால்மார்க் முத்திரையை வரவேற்கிறோம். பழைய ஹால்மார்க் முத்திரையுடன் நகைகளை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க 3 நாட்களுக்கு மேல் ஆகிறது. புதிய ஹால்மார்க் முத்திரையால் மேலும் காலதாமதம் ஏற்படும்.
இதனால், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் நகைகளை வழங்க முடியாது. எனவே, புதிய நடைமுறையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல்லில் போராட்டம்
திருச்செங்கோடு, சங்ககிரி தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவரும், தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான லோகநாதன் தலைமை வகித்தார். மத்திய அரசின் புதிய திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் 500 கடைகள் அடைப்பு
ஈரோடு மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தங்க நகைக் கடைகள், நேற்று காலை 9 மணி முதல் 11.30 வரை இரண்டரை மணி நேரம் கடைகளை அடைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.போராட்டம் குறித்து நகைக் கடை உரிமையாளர்கள் கூறியதாவது
ஈரோடு மாவட்டத்தில் ஹால்மார்க் யுனிக் எண் பதிவு செய்வதற்கு இரண்டு மையங்கள் மட்டுமே உள்ளன. இதனால் பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. வடமாநிலங்களில் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த வேண்டும். ஹால்மார்க் யுனிக் எண் பதிவு மையத்தில் பணியாற்றுபவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து காலதாமதத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT