Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM
கரோனா பரவல் அச்சத்தால், கோவையில் எளிமையான முறையில், ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
கரோனா பரவல் அச்சத்தால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் எந்தவித ஆரவாரங்களும் இல்லாமல், எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஓணம் பண்டிகைக்காக நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
ஓணம் பண்டிகையையொட்டி, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் வளாகத்தில் 45 கிலோ எடை கொண்ட செவ்வந்தி, கோழிக்கொண்டை, சம்பங்கி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களைக் கொண்டு, அத்தப்பூ கோலமிடப்பட்டிருந்தது. 35 கிலோ பூக்களைக் கொண்டு பிரகாரங்களின் முன்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. மேலும், நேற்று காலை 5 மணிக்கு இக்கோயிலின் நடை திறக்கப்பட்டது. கோயிலில் உள்ள ஐயப்பன், விநாயகர், நாகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஓணம் பண்டிகையையொட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் ஏராளமானோர், சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்கு நேற்று வந்தனர்.
கரோனா பரவல் அச்சத்தால், நோய் தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், நேற்று பக்தர்கள் கோயில் வாசலில் நின்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். அப்போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. அதேபோல, கோவை காந்திபுரம் டாடாபாத்தில் உள்ள, கோவை மலையாளி சமாஜத்தில் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. ஆனால், வழக்கமாக நடத்தப்படும் கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தன. கோவையின் பல்வேறு இடங்களில் வசிக்கும் கேரள மக்கள், தங்களது வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலம் போட்டும், இனிப்புகளை செய்தும், வீடுகளில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும், நேற்று ஓணம் பண்டிகையை சிறப்பாக, எளிமையான முறையில் கொண்டாடினர்.
திருப்பூரில் பனியன் தொழிலை சார்ந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்கள், தங்கள் வீடுகளில் ஓணம் பண்டிகையை நேற்று கொண்டாடினர். குறிப்பாக, திருப்பூர் மாநகரில் ராஜா கார்டன், ஓடக்காடு பகுதிகளிலுள்ள மக்கள் ஓணம் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடினர். அப்போது, வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, நடனமாடி மகிழ்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT