Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

ஏற்காடு ஏரி ஆகாயத்தாமரையை ரூ.15 லட்சத்தில் அகற்றும் பணி விரைவில் தொடக்கம் : சுற்றுலா பயணிகளுக்காக ஏரியில் கூடுதல் படகுகளை இயக்க வாய்ப்பு

சேலம்

ஏற்காடு ஏரியின் நீர் பரப்பில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை முழுமையாக அகற்றுவதற்கு ரூ.15 லட்சத்தில் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சிறப்பு மிக்கது. இங்கு, தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்டவற்றில் இருந்து, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காட்டில் பல இடங்கள் பயணிகளை கவர்ந்தாலும், ஏற்காடு ஏரியில், குளிர்ச்சியான சூழலில் படகு சவாரி செய்வது, முக்கிய பொழுதுபோக்காக உள்ளது.

இந்நிலையில், சுமார் 25 ஏக்கர் பரப்பு கொண்ட ஏரியில், ஆகாயத் தாமரைச் செடிகள் அதிகரித்து வருகிறது. அவற்றை சுற்றுலாத் துறை சார்பில் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. எனினும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சுற்றுலாத்துறை திட்டமிடப்பட்டு, ரூ.15 லட்சம் செலவில் பணியை முடிக்க அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆகாயத்தாமரை செடி படர்வது, தீராத பிரச்சினையாக உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதை அடுத்து, ஏற்காடு ஏரியில் இருந்த படகுத்துறை சீரமைக்கப்பட்டது. பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில் பயன்படுத்த வசதியாக, கூடுதல் படகுகளும் வந்துள்ளன.ஆகாயத் தாமரை படர்ந்திருப்பதால், படகுகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்குவது, சிக்கலாக இருக்கும்.

எனவே, ஆகாயத்தாமரை படரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, அதனை ரூ.15 லட்சம் செலவில் அகற்றுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2 மாதத்துக்குள் ஆகாயத்தாமரையை முழுமையாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஏற்காடு ஏரியின் அழகு மேம்படுவதுடன், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் காத்திருக்க அவசியமின்றி, மகிழ்ச்சியாக படகு சவாரி செய்ய வாய்ப்பு ஏற்படும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x